மாட்டுப் பொங்கல் விழாவை முன்னிட்டு மதுரையில் ஜல்லிக்கட்டின் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டியினை நேற்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்தார். வீரர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றதுடன் போட்டி தொடங்கியது.
முன்னதாக மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிக்காக வீரர்களின் மருத்துவ பரிசோதனை தொடங்கி நடந்து வந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டில் சுமார் ஆயிரம் காளைகள் பங்கேற்க இருப்பதால், அவற்றின் மருத்துவ பரிசோதனையும் நடந்தது. பாலமேடு ஜல்லிக்கட்டில் இந்த ஆண்டு புதுமையாக ஸ்கோர் போர்டு அமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு சுற்றிலும் எந்த வீரர் எத்தனை காளைகளை தழுவினார், எந்த காளை எப்படி விளையாடியது போன்ற தகவல்கள் இதில் நேரடியாக காண முடியும். இந்த டிஜிட்டல் மெகா போர்டு ஜல்லிக்கட்டு மேடை அருகே நிறுவப்பட்டுள்ளது.
பாலமேடு ஜல்லிக்கட்டுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் மிக வலுவாக செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐ.ஜி. விஜயேந்திர பிதாரி, மதுரை சரக டி.ஐ.ஜி. அபினவ் குமார் மற்றும் எஸ்.பி. அரவிந்த் ஒருங்கிணைப்பில், மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து வந்த டி.எஸ்.பி.க்கள் உட்பட சுமார் 2,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். பாலமேடு ஜல்லிக்கட்டில் சீறிப்பாயும் காளைகளை தைரியமாக தழுவி அதிகப்படியாக பிடிக்கும் வீரருக்கு முதல் பரிசாக 8 லட்சம் மதிப்புள்ள கார் வழங்கப்பட உள்ளது. அதே போல், களத்தில் சிறப்பாக விளையாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் சிறந்த காளையின் உரிமையாளருக்கு 9 லட்சம் மதிப்புள்ள டிராக்டர் பரிசாக அளிக்கப்படுகிறது. இந்த முதல் பரிசுகள் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் வழங்கப்படுகின்றன. இரண்டாம் பரிசாக டூவீலர், அமைச்சர் மூர்த்தி சார்பில் வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்படும் காளையின் உரிமையாளருக்கு, தனியார் பால் நிறுவனம் சார்பில் காங்கேயம் இன நாட்டு பசுமாடு மற்றும் கன்று பரிசாக வழங்கப்படுகிறது.