திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மலர்த்தூவி மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திருவள்ளுவர் தினத்தை ஒட்டி தமிழக மக்களுக்கு 4 முக்கிய வாக்குறுதிகள் அளித்தார்.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் தள பதிவில், ஈராயிரம் ஆண்டுகள் கடந்து இன்றளவும் நிலைத்து நிற்கும் இலக்கியமாய், உலக மாந்தர்க்கெல்லாம் பொதுவான உயரிய நற்கருத்துகள் கொண்ட திருக்குறளைப் படைத்திட்ட வள்ளுவப் பெருந்தகையைப் போற்றுவோம். அறம், பொருள், இன்பம் என்ற முப்பாலையும் ஈரடியில் தந்து மூவாத் தமிழுக்குப் பெருமை சேர்த்த அய்யன் வள்ளுவர் சொன்ன அறநெறிவழியில் நம் வாழ்வு அமையட்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவர் விருது மற்றும் தமிழக அரசின் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். பேரறிஞர் அண்ணா விருதை அமைச்சர் துரைமுருகனுக்கும், தந்தை பெரியார் விருதை வழக்கறிஞர் அருள்மொழிக்கும், திருவள்ளுவர் விருதை மு.பெ.சத்தியவேல் முருகனாருக்கும், அம்பேத்கர் விருதை சிந்தனைச்செல்வனுக்கும் முதல்வர் வழங்கினார்.

மேலும் காமராஜர் விருதை எஸ்.எம். .இதயத்துல்லாவுக்கும், பாரதியார் விருதை கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருதை கவிஞர் யுகபாரதிக்கும், தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருதை வெ.இறையன்புக்கும், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் விருதை சு.செல்லப்பாவுக்கும், இலக்கிய மாமணி விருதை (மரபுத்தமிழ்) த.இராமலிங்கத்திற்கும், இலக்கிய மாமணி விருது (ஆய்வுத்தமிழ்) சி.மகேந்திரனுக்கும், இலக்கிய மாமணி விருது (படைப்புத்தமிழ்) இரா.நரேந்திரகுமாருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார். விருதாளர்களுக்கு விருதுத் தொகையாக ரூ.5 லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.