மதுராந்தகத்தில் நடந்த நிகழ்ச்சியில் ஒரே மேடையில் என்டிஏ கூட்டணி தலைவர்கள் ஒன்றாக தொண்டர்கள் முன் தோன்றினார்கள். களை குலுக்கி கொண்டார்கள். கட்டிப்பிடித்து வாழ்த்துக்களை கூறிக் கொண்டார்கள். ஆனாலும் அ.தி.மு.க.வின் ஒரு தரப்பில் இதை ரசிக்கவில்லை. காரணம், பா.ஜ.க.வை ஏற்காத நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் அ.தி.மு.க.வில் இன்னமும் இருக்கிறார்கள்.

அவர்கள் சொன்னபோது, மேடையில் தென்பட்ட கொடிகள், தொண்டர்கள் கையில் ஏந்தி வந்த சின்னங்கள் அனைத்துமே பா.ஜ.க.வின் தாமரையாகவே தெரிந்தது. அதாவது பா.ஜ.க. சின்னம் தென்பட்ட அளவுக்கு அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னம் கூட்டத்தில் தென்படவே இல்லை. இதே போல பிரதமர் மோடி பேசும் போது, பா.ஜ.க.வின் என்.டி.ஏ. அரசு, டபுள் என்ஜின் அரசு என்ற வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சொன்னார்.. அவரது இந்த பேச்சு, ஒருவேளை பா.ஜ.க. தமிழகத்தில் நேரடியாக ஆட்சி நடத்தப்போகிறதா? என்ற சந்தேகத்தை பல்லாயிரக்கணக்கான அ.தி.மு.க. தொண்டர்களுக்கு ஏற்படுத்தி உள்ளது. .

அதுமட்டுமல்ல, எடப்பாடி பழனிசாமியை இதுவரை முதல்வர் வேட்பாளராக யாருமே முன்மொழியவில்லை. டிடிவி தினகரன், அன்புமணி ராமதாஸ் போன்ற தலைவர்கள் எடப்பாடியை ஏற்றுக்கொண்டாலும், பிரதமர் மோடி அந்த வார்த்தையை சொல்லவில்லை. இது குழப்பத்தை ஏற்படுத்துவதாக தொண்டர்கள் கருதுகின்றனர். கூட்டணிக்காக அ.தி.மு.க. தனது அடையாளத்தை விட்டு விடக்கூடாது. கூட்டணியில் இருந்தாலும், அ.தி.மு.க. தனது தனித்துவத்தை, திராவிட அடையாளத்தை மறக்கக் கூடாது. இந்த குழப்பத்தை தீர்க்க வேண்டிய பொறுப்பு அ.தி.மு.க. மேலிட தலைவர்களுக்கு மட்டுமே உண்டு. அப்போதுதான் தொண்டர்கள் இறங்கி களத்தில் வேலை பார்க்க முடியும் என்று தங்களது ஆதங்கத்தை அ.தி.மு.க.தொண்டர்கள் வெளிப்படுத்தி உள்ளனர்.