தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இன்று வியாழக் கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறையின் சார்பில், 2026-ம் ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்களின் பயண வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் விவரமாக, கடந்த 12-ம் தேதி அன்று நள்ளிரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் 2,092 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டதுடன், கூடுதலாக 1010 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன. ஆக மொத்தம் 3,102 பேருந்துகள் இயக்கப்பட்டு, 1,30,284 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
ஆக, கடந்த 09-ம் தேதி முதல் 12-ம் தேதி அன்று நள்ளிரவு 24.00 மணி வரை, மொத்தம் 11,372 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4,88,780 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன், இதுவரை 2,56,977 பயணிகள் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பொங்கல் திருநாள் பயண காலத்தில், பொதுமக்களின் தேவையை கருத்தில் கொண்டு, தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்படும். எனவே, கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு, பொதுமக்கள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணம் மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே முன்பதிவு இல்லாத அரசு பஸ்களிலும் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் பயணிகள் அதிகஅளவில் பயணிகள் திரண்டிருந்தனர். பெரும்பாலான பஸ்களில் இடம்பிடிக்க மக்களிடையே போட்டி நிலவியது. இதற்கிடையே இன்று பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், வழக்கத்தைவிட அதிக அளவிலான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.