சென்னை, தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறை சார்ந்த திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றுதொடங்கி வைத்தார். அதன் விவரம் வருமாறு:-

திட்டம், வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிகள் துறையின் சென்னை மெட்ரோ சொத்து மேலாண்மை நிறுவனம் சார்பில் 167 கோடியே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தற்போதைய மந்தைவெளி பேருந்து பணிமனை மற்றும் முனையத்தில் ஒருங்கினைந்த பன்முக போக்குவரத்து மற்றும் வணிக வளாகத்திற்கான கட்டுமான பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ராஜீவ் காந்தி சாலை ஒக்கியம் மடுவில் புதியதாக கட்டப்பட்டுள்ள நான்கு வழி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் திறந்து வைத்தார். கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 16 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 12 கட்டடங்களை திறந்து வைத்து, 118 கோடியே 42 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 31 ஒருங்கிணைந்த கால்நடை பண்ணைகள் மற்றும் நவீன ஒருங்கிணைந்த இறைச்சி உற்பத்தி மற்றும் இறைச்சி பதப்படுத்தும் வளாகத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 126 இளநிலை உதவியாளர் மற்றும் 96 தட்டச்சர் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார். பதிவுத்துறையின் ஸ்டார் 3.0 திட்டத்தின் கீழ், 18 சேவைகள் உள்ளடக்கிய செயல் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கு தலா 36 லட்சம் ரூபாய் கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளை வழங்கினார். மேலும், 2 தொன்மையான தேவாலயங்கள் மற்றும் 2 பழைமை வாய்ந்த தேவாலயங்களை புனரமைப்பதற்கு முதல் தவணைத் தொகையாக ஒரு கோடியே 81 லட்சத்து 97 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை தேவாலய பிரதிநிதிகளிடம் முதல்வர் வழங்கினார்.

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாவட்டம், சிப்காட் தொழில் பூங்கா மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு முள்ளக்காடு கிராமத்தில், நாளொன்றுக்கு 60 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரை நன்னீராக்கும் திட்டப்பணிக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.