பிப்ரவரி 7-ம் தேதி அன்று விருதுநகரில் நடைபெறவிருக்கும் தி.மு.க. இளைஞர் அணியின் தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம், சென்னையில் நடைபெற்றது. இதில் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் கூட்டத்துக்குத் தலைமை தாங்கி பேசியதாவது;

இளைஞர் அணியைப் பொறுத்தவரை எந்த நிகழ்ச்சியும் இளைஞர் அணிக்கு வலுசேர்க்கும் விதத்திலும், அதே நேரத்தில் கழகத்திற்கு இன்னும் கூடுதல் வலிமை சேர்க்கும் விதத்திலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கவனமாகத் திட்டமிட்டுச் செய்து வருகிறோம். கடந்த டிசம்பர் மாதத்தில் திருவண்ணாமலையில் நடைபெற்ற வட மண்டல நிர்வாகிகள் சந்திப்பை மிகப்பெரிய ஒரு வெற்றிச் சந்திப்பாக, நடத்திக் காட்டினோம்.

ஏற்கனவே நம்முடைய இரண்டாவது மாநில மாநாட்டை நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சேலத்தில் மிகச் சிறப்பாக, மிகப்பெரிய வெற்றி மாநாடாக நடத்திக் காட்டினோம். அந்த மாநாட்டின் வெற்றிக்காக இங்கு வந்துள்ள நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுடைய உழைப்பை, நூறு சதவிகிதம் வழங்கியுள்ளீர்கள். இதனைத் தொடர்ந்து இளைஞர் அணியின் சார்பில் தற்போது பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

நம் கழகத்தின் கொள்கைகளை, அரசின் சாதனைகளை உள்வாங்கி கட்சிப் பணியை வலிமையோடு செய்ய வேண்டும் என்பதே இச்சந்திப்பின் ஒரே நோக்கம். இச்சந்திப்பு, தேர்தல் நேரத்தில் நடைபெற்றாலும், அது தேர்தலுக்குப் பயனுள்ள ஒரு கூட்டமாகவே அமையும். ஆனால், அது மட்டுமே நம்முடைய இலக்கல்ல. எதிர்காலத்தில் கழகத்திற்கு மேலும் பல இளைஞர்களை அழைத்து வந்து வலிமை சேர்க்கும் ஒரு பாசறைக் கூட்டமாக இச்சந்திப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பல்வேறு நிகழ்ச்சிகளுக்குப் பிறகு கட்சி தலைவர் மற்றும் நம்முடைய முதல்வர் நிர்வாகிகளுக்குத் தமது அறிவுரைகளை வழங்க உள்ளார்.

வருகைப் பதிவு மிக முக்கியம். எத்தனை நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளார்களோ அத்தனை பேரும் நிச்சயமாக வர வேண்டும். அந்தந்த மாவட்டங்களிலிருந்து புறப்படும் போதே அவர்களுக்குக் கட்டுப்பாடுகள் குறித்து எடுத்துரைத்து அழைத்து வருமாறு கேட்டுக்கொள்கிறேன். திருவண்ணாமலை சந்திப்பு முடிந்த பிறகு சுமார் ஒரு வாரம் வரை அனைத்து இயக்கங்களும், ஊடகங்களும் அச்சந்திப்பை எவ்வாறு இவ்வளவு சிறப்பாக நடத்தினார்கள், இவ்வளவு இளைஞர்களை எவ்வாறு திரட்டினார்கள், முன்னேற்பாடுகள் எப்படி, இவ்வளவு நேர்த்தியாக இருந்தன என்பதைப் பற்றியே பேசினார்கள். எனவே, இந்த முறை திருவண்ணாமலை சந்திப்பை விடப் மிகப்பெரிய வெற்றியை விருதுநகர் சந்திப்பில் நிகழ்த்திக் காட்ட வேண்டும். அதற்கு உங்களுடைய ஒத்துழைப்பும் ஆதரவும் மிக மிக அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.