''பாஜவில் எனக்குப்பிடித்த தலைவர் அம்ரிந்தர் சிங் தான்,'' என்று இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராமில் இளம்தலை முறையினர் தன்னிடம் கேள்விகளை அனுப்புமாறு காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் அழைப்பு விடுத்திருந்தார். “மாணவர்களே, இளம் தலைமுறையினரே நான் உங்கள் கருத்துக்களைக் கேட்கத் தயாராக இருக்கிறேன். இன்ஸ்டாகிராமில் என்ன வேண்டுமானாலும் கேளுங்கள், என்னால் முடிந்தவரை பல கேள்விகளுக்குப் பதிலளிப்பேன்” என்று கூறியிருந்தார்.
இன்ஸ்டாகிராம் கலந்துரையாடலில் போது பாஜவில் தனக்குப் பிடித்தமான அரசியல்வாதி என்று பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கை காங்கிரஸ் எம்பியும், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கூறியது பஞ்சாபில் அரசியல் களத்தில் விவாதத்தை ஏற்படுத்தியது. ராகுல் கூறுகையில், ''அவருடன் எனக்கு நல்ல பழக்கம் உண்டு; அவர் ஒரு அருமையான மனிதர். அவர் ராணுவ வரலாற்றில் வல்லுநர். வணக்கம், அம்ரிந்தர் மாமா,' என்று ராகுல் கூறினார்.
இது குறித்து அம்ரிந்தர் சிங் கூறியதாவது; ராகுல் என்னைப்பற்றி பேசியது நல்லது; எனக்கு ராகுல் மற்றும் பிரியங்காவை அவர்களின் குழந்தைப் பருவத்தில் இருந்தே தெரியும். அவர்களின் தந்தையான முன்னாள் பிரதமர் ராஜிவ் எனது வகுப்புத் தோழராகவும் நண்பராகவும் இருந்தார். அந்தத் தனிப்பட்ட உறவுகளுக்கும் தனது தற்போதைய அரசியல் பயணத்திற்கு எந்த சம்பந்தமும் இல்லை. நான் பாஜவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவளித்தாலும், ராகுல் மற்றும் சோனியாவுடனான தனது குடும்ப உறவுகள் தொடரும்'', என்றார்.