பாராளுமன்றம் ஆண்டுக்கு 3 முறை கூட்டப்படும். அதன்படி ஆண்டின் முதல் கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் 2 அமர்வாக நடைபெறுகிறது. முதல் அமர்வு நேற்று தொடங்கி முதல் வருகிற 13-ம் தேதி வரையும், 2-ம் அமர்வு மார்ச் மாதம் 9-ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி வரையும் நடக்கிறது.
தமிழ்நாடு, கேரளா உள்பட 5 மாநில சட்டமன்ற தேர்தல், தமிழ்நாடு, கேரளா, கர்நாடக மாநில சட்டமன்றங்களில் கவர்னரின் செயல்பாடு உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் இந்த கூட்டம் தொடங்கியது. முதல் நாளான நேற்று பாராளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். ஜனாதிபதி தனது உரையை தொடங்கிய உடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எதிர்ப்பு முழக்கம் எழுப்பினர். மத்திய அரசின் கடந்த கால சாதனைகளை விளக்கி ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது, கடந்தாண்டில் 150 மில்லியன் டன் அரிசி உற்பத்தி செய்து உலகிலேயே முதல் இடத்தை இந்தியா பிடித்து சாதனை படைத்துள்ளது. உலகிலேயே மிகப்பெரிய மெட்ரோ நெட்வொர்க் கொண்ட நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது. விண்வெளி சுற்றுலா திட்டத்தை செயல்படுத்த இந்தியாவுக்கு வெகுதூரம் இல்லை.
கடந்த 2025-ம் ஆண்டில் மட்டும் 2 கோடிக்கும் அதிகமான இருசக்கர வாகன பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்தாண்டில் மட்டும் 350 மில்லியன் டன் உணவு தானிய உற்பத்தி செய்து இந்தியா சாதனை படைத்துள்ளது. சூரிய மின் திட்டத்திற்கான அரசின் நடவடிக்கைகள் காரணமாக புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கணிசமான வளர்ச்சியை கண்டுள்ளோம் என்று ஜனாதிபதி பேசினார்.
இதனைத் தொடர்ந்து இன்று பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. வருகிற 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 11 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த பட்ஜெட், சுதந்திர இந்தியாவின் 88-வது பட்ஜெட் ஆகும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இது 9-வது பட்ஜெட் என்பது குறிப்பிடத்தக்கது. 5 மாநில தேர்தலை முன்னிட்டு பல்வேறு சலுகைகளை இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.