குன்னுார், அக். 11-
‘நீலகிரி மலை பாதையின் ஸ்திர தன்மையை உறுதிப்படுத்த, பருவமழை தீவிரமடையும் முன்பு ஆய்வு நடத்த கமிட்டி அமைக்க வேண்டும்,’ என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் மழை காலங்களில் நடக்கும் மண் மற்றும் நிலச்சரிவுகளின் போது, பாறை விழுந்து பல்வேறு பாதிப்புகள்; உயிர் சேதங்கள் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகளுக்கு கடந்த, 15 ஆண்டுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறைந்து, குன்னுார்– மேட்டுப்பாளை
யம் சாலையில், மலை பாதையின் ஸ்திர தன்மை
யை உறுதிப்படுத்தாமல் நடந்த விரிவாக்க பணிகளும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
செங்குத்தாக வெட்டியது தவறு
பழமையான ராட்சத பாறைகளை கனரக இயந்திரங்களால் குடைந்ததால், சாலையோரங்கள் பலவீனமடைந்து அபாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. மலைசரிவுகளை செங்குத்தாக வெட்டுவது, அடிவாரங்களை பலவீனப்படுத்துவது போன்ற தவறுகளும் சில நிலச்சரிவுக்கு காரணமாக இருந்துள்ளன. இதனை சுட்டி காட்டி, மலையை செங்குத்தாக வெட்டுவதற்கு எதிராக, சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் குன்னுார் -மேட்டுப்பாளையம் பாதையில் திடீரென பாறை உருண்டு விழுந்து, ஜெகதளாவை சேர்ந்த முன்னாள் விமானப்படை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த மலை பாதையின் ஸ்திரதன்மையை மறுமதிப்பீடு செய்ய மாநில அரசுகள் பல ஆண்டுகளுகாக போதிய நடவடிககை எடுக்கவில்லை. கடந்த, 200 ஆண்டுகளுக்கு முன் குதிரை, மாட்டு வண்டிகளுக்காக அமைக்கப்பட்ட இந்த பழைய பாதை சிறிது, சிறிதாக வாகனம் செல்வதற்காக மேம்படுத்தப்பட்டது.
இதை தொடர்ந்து, போக்குவரத்து மற்றும் வாகன எடையும் பல நுாறு மடங்கு அதிகரித்துவிட்டது. ‘இந்த சாலைகளால் இனி அதிகளவில் வாகன சுமையை தாக்க முடியாது; அதற்கு தகுந்தாற் போது, இந்த சாலையில் பெரிய கனரக வாகனங்கள் வருவதை தவிர்க்க வேண்டும்; சிறிய வாகனங்களை ஒரு புறம் மாற்று பாதையில் செல்ல திட்டமிட வேண்டும்,’ என, 2009ல் நடந்த நிலச்சரிவின் போது, புவியியல் ஆய்வு மைய குழுவினர் மாநில அரசுக்கு ஆலோசனை தெரிவித்தனர்.
நீலகிரி ஆவண மைய இயக்குனர் தர்மலிங்கம் வேணுகோபால் கூறுகையில்,‘‘தற்போதைய சூழலில், நீலகிரி மலை பகுதிகளில் ஸ்திரதன்மை குறைந்து, அபாய பகுதிகள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் இங்கு அபாய பகுதிகள் குறைந்து
விட்டதாக மாவட்ட நிர்வாகம் பொய்யான மாயையை உருவாக்குவது தவறாகும்.
சமீபத்தில் நடந்த முன்னாள் விமானப்படை அதிகாரியின் மரணம் இப்பாதையின் அபாய நிலையை உணர்த்துகிறது. மலை பாதுகாப்புக்கான கண்துடைப்பு ஆலோசனை கூட்டங்கள் மட்டும் பயனளிக்காது. இன்று (நேற்று) குன்னுாரில் பெரியளவிலான தடுப்பு சுவர் இடிந்தற்கும், உரிய ஆய்வு மற்றும் விதிமீறிய அனுமதிகள் தான் காரணம். வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் முன்பு, நீலகிரி மலை பாதையின் ஸ்திர தன்மையை ஆய்வு செய்ய மாநில அரசு சிறப்பு கமிட்டியை அமைக்க வேண்டும்,’’ என்றார்.