ராமநாதபுரம், அக். 11-

ராமநாதபுரம் மாவட்டத்தில் இயக்கப்படும் அரசு பஸ்கள் முறையான பராமரிப்பு இல்லாததால் அடிக்கடி பழுதாகின்றன. பஸ்களை பராமரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

மாவட்டத்தில் ராமநாதபுரம் நகர், புறநகர், ராமேஸ்வரம், முதுகுளத்துார், பரமக்குடி, கமுதி ஆகிய கிளைகளில் இருந்து 400 க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் கிராமங்கள் மற்றும் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்படுகின்றன. கிராமங்களில் இருந்து பள்ளி, கல்லுாரி மற்றும் பணிக்கு செல்வோர் குறிப்பிட்ட பஸ்சை நம்பி நீண்ட நேரம் காத்திருக்கின்றனர்.

பெரும்பாலான வழித்தடத்தில் ஓரிரு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. அவ்வாறு இருக்கும் நிலையில் பஸ்களை உரிய முறையில் பராமரிக்காமல் இயக்குவதால் பாதி வழியில் பஸ்கள் பழுதாகி நிற்கின்றன. சமீபத்தில் ராமநாதபுரத்தில் இருந்து மதுரை சென்ற அரசு பஸ் இரவில் நடுவழியில் பழுதாகி நின்றது. அதே போல் புதிய பஸ் ஸ்டாண்டிற்கு வந்த ராமேஸ்வரம் பஸ் சிக்னலில் பழுதானது.

பயணிகள் பஸ்சை தள்ளி அருகில் இருந்த பஸ் ஸ்டாண்டிற்குள் கொண்டு சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அரண்மனை பஸ் நிலையத்தில் இருந்து கீழக்கரை, பெரியப்பட்டினம், தேவிபட்டினம், ஏர்வாடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு தினமும் ஏராளமான 70 க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இவற்றில் பெரும்பாலான பஸ்களில் பக்கவாட்டு தானியங்கி கதவுகள் செயல்படாமல் உள்ளது. இதனால் மாலை கூட்ட நெரிசல் மிகுந்த நேரத்தில் படியில் தொங்கியப்படி பயணிகள் பயணிக்கின்றனர். இதுகுறித்து பயணிகள் கூறுகையில், தினமும் வேலைக்கும், பள்ளி, கல்லுாரிக்கும் செல்ல அரசு பஸ்களையே நம்பியுள்ளோம். அடிக்கடி பஸ் பழுதாகி பாதி வழியில் நின்று விடுகிறது. அனைத்து பஸ்களுக்கும் முறையான தொழில் நுட்ப பரிசோதனை செய்து பராமரிக்க வேண்டும். கிராமப் புறங்களுக்கு புதிய பஸ்களை இயக்க வேண்டும் என்றனர்.போக்குவரத்து ஊழியர்கள் கூறுகையில், கிராமப்புற வழித்தடங்களில் இயக்கப்படும் சில அரசு பஸ்கள் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள பழைய வாகனங்கள் என்பதால் அடிக்கடி இயந்திரக் கோளாறு, கிளட்ச் மற்றும் பிரேக் பழுது, டயர் சேதம் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. பணிமனைக்கு வரும் அனைத்து பஸ்களையும் உரிய முறையில் பராமரித்து வருகிறோம்.

ஆட்கள் பற்றாக்குறை, உதிரி பாகங்கள் கிடைப்பதில் தாமதம் உள்ளிட்ட காரணங்களால் சில பஸ்களுக்கு பழைய உதிரிபாகங்கள் பொருத்தி இயக்கப்படுகிறது என்றனர்.