சிங்கம்புணரி, அக். 11-

சிங்கம்புணரியில் கிராவல் மண் கடத்தல் அதிகரித்துள்ள நிலையில் கடத்தலை தடுக்க இரவு நேரங்களில் கூடுதல் கண்காணிப்பு அவசியம் என மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இத்தாலுகாவில் சிங்கம்புணரி, சதுர்வேதமங்கலம், பிரான்மலை உள்ளிட்ட பகுதிகளில் சமீப காலமாக கிராவல் மண் கடத்தல் அதிகரித்துள்ளது. நீர்நிலை மற்றும் தனியார் நிலங்களில் அனுமதியின்றி இரவு நேரங்களில் கனரக வாகனங்களை கொண்டு வெட்டி அள்ளப்படும் மண் இரவோடு இரவாக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

எம் சாண்ட், பி சாண்ட் மணல் லாரிகளை போல் மேலே தார்ப்பாயால் மூடி அடியில் கிராவல் மண்ணை கொண்டு செல்லும்போது மக்களுக்கு சந்தேகம் வருவதில்லை. இரவு நேரங்களில் அதிகாரிகளின் கண்காணிப்பும் குறைவாகவே உள்ளது. இதனால் கிராவல் மண் கடத்தல் கும்பல் எந்த இடையூறும் இல்லாமல் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். இது தவிர சில இடங்களில் கிரஷர் குவாரிகளுக்கு அனுமதி பெற்றுக்கொண்டு அந்த பகுதியில் மண் அள்ளப்பட்டு வெளிமாவட்டங்களுக்கு அனுப்பப்படுகிறது. இது பற்றி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும் பெரிய அளவில் தடுப்பு நடவடிக்கை இல்லை.

ஆற்றோரங்களில் மண் வெட்டி எடுப்பதன் மூலம் அருகே உள்ள கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. குறிப்பாக சதுவேதமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிலநீர்பட்டி, மு.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தப்பட்டி உள்ளிட்ட பகுதிகள் ஏற்கனவே ஆற்று ஓரங்களில் பெரிய அளவில் மணல் வெட்டி எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அப்பகுதியில் சிலர் கிராவல் மண் வெட்டி எடுக்க துவங்கியுள்ளனர். இதனால் ஆற்றில் தண்ணீர் வந்தால் கிராமங்களுக்குள் வெள்ளம் புகும் அபாயம் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் அனுமதி இன்றி கிராவல் வெட்டி கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.