மதுரையில் மதுரை-ராமநாதபுரம் மண்டல ஆவண எழுத்தாளர்கள் சங்கத்தின் மாநில சிறப்புக்கூட்டம் மற்றும் நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். கூட்டம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாவட்ட பத்திர எழுத்தாளர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ராஜமாணிக்கம்,

இக்கூட்டத்தில் ஆவண எழுத்தாளர்களுக்கு மருத்துவக் காப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும், காலமான ஆவண எழுத்தாளர்களின் குடும்பங்களுக்கு உரிய நிதியுதவி மற்றும் நலத்திட்டங்களை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.மதுரை தெற்கு வாசலில் 100 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவந்த ஜாயிண்ட்-2 பதிவு அலுவலகம், மராமத்துப் பணிகளுக்காகக் கையகப்படுத்தப்பட்டது. பணிகள் முடிவடைந்த பின்னரும் அந்த அலுவலகம் மீண்டும் ஒப்படைக்கப்படாமல் உள்ளதால், பொதுமக்கள் மற்றும் குடும்பங்களின் சிரமத்தைத் தவிர்க்கும் வகையில் உடனடியாக அக்கட்டிடத்தை மீண்டும் பதிவுத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.பொதுமக்களின் நலன் கருதி பதிவுத்துறையின் வழிகாட்டி மதிப்பை (Guideline Value) அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு உயர்த்தக் கூடாது என கேட்டுக்கொள்ளப்பட்டது.ஆவண எழுத்தாளர்களுக்கு நிரந்தர உரிமம் வழங்கப்பட வேண்டும். மேலும், வழக்கறிஞர்கள் ஆவணம் எழுதும்போது அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்புகளைத் தடுக்க, பார் கவுன்சில் அனுமதி பெற்றுள்ள வழக்கறிஞர்களுக்குத் தனியாக 'லாகின்' வசதி வழங்கி தணிக்கை செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.அரசின் ஆன்லைன் பதிவு முறை வரவேற்புக்குரியது என்றும், இத்தொழில்நுட்ப மாற்றத்திற்கு ஏற்ப ஆவண எழுத்தாளர்களுக்கு போதிய பயிற்சிகளை வழங்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. அதேபோல, பதிவுத்துறை அதிகாரிகளுக்கும் உதவியாளர்களுக்கும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கி, தேவையற்ற பத்திர மறுப்பு நடைமுறைகளைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டது.பதிவுத்துறையில் லஞ்சத்தை ஒழிக்க ஆவண எழுத்தாளர்கள், பொதுமக்கள் மற்றும் அதிகாரிகள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. நிகழ்வில் மாவட்ட செயலாளர் வாசுதேவன் உள்ளிட்ட மாநில மாவட்ட நிர்வாகிகள் பெரும் திரளாக பங்கேற்றனர்.