மதுரை: நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதிலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் சிறப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் மத்தியில் பாராட்டு குவிந்து வருகிறது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. நிஷாந்த் கிருஷ்ணா, இ.ஆ.ப., தலைமையில் தேசிய நுகர்வோர் தினம் மற்றும் உலக நுகர்வோர் உரிமைகள் தின விழா நடைபெற்றது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வு, நுகர்வோர் உரிமைகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.
பொருட்களை வாங்கும்போது தரம், சரியான எடை, கலப்படமின்மை, அதிகபட்ச சில்லரை விலை, உற்பத்தி மற்றும் காலாவதி தேதிகளை பொதுமக்கள் சரிபார்க்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டதுடன், நுகர்வோர் உரிமைகள் மீறப்பட்டால் உரிய ஆவணங்களுடன் புகார் செய்து இழப்பீடு பெற முடியும் என்பதும் எடுத்துரைக்கப்பட்டது.
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பல்வேறு நுகர்வோர் விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற 104 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கியது, மாணவர்கள் மத்தியில் நுகர்வோர் உரிமை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் சிறப்பான முயற்சியாக அமைந்துள்ளது.
இந்தப் பணிகளை சிறப்பாக ஒருங்கிணைத்த பள்ளி நுகர்வோர் மன்ற ஒருங்கிணைப்பாளருக்கும் மாவட்ட ஆட்சியர் கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலருக்கும் பாராட்டு
மாவட்டத்தில் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு, விழிப்புணர்வு நடவடிக்கைகள் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் தொடர்பான பணிகளை ஒருங்கிணைத்து செயல்பட்டு வரும் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் திரு. ப. ராஜகுரு அவர்களின் பங்களிப்பும் பாராட்டுக்குரியது. இந்நிகழ்வில் அவரும் பங்கேற்றுள்ளார்.
மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜகுரு உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வரும் விழிப்புணர்வு நடவடிக்கைகள், நுகர்வோர் உரிமைகளை பொதுமக்கள் அறிந்து பயன்படுத்துவதற்கு பயனுள்ளதாக அமைந்துள்ளதாக பாராட்டுகள் தெரிவிக்கப்படுகின்றன.
“நுகர்வோர் உரிமையை பாதுகாப்பது என்பது பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தை பாதுகாப்பதாகும்” என்ற நோக்கில் செயல்படும் மதுரை மாவட்ட நிர்வாகத்தின் இந்த அணுகுமுறை பாராட்டத்தக்கது. மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா அவர்களின் தலைமையிலும், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ராஜகுரு அவர்களின் ஒருங்கிணைப்பிலும் நுகர்வோர் நலப்பணிகள் தொடர்ந்து சிறப்பாக நடைபெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.