மதுரை: அரசு அலுவலர்களின் உடல்நலனில் தனிக்கவனம் செலுத்தி, அவர்களுக்காக சிறப்பு மருத்துவ முகாமை ஏற்பாடு செய்து முன்மாதிரியான நிர்வாகத்தை வெளிப்படுத்தியுள்ள மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, , அவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவம்–மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் இன்று (13.08.2026) ஒரு நாள் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சுமார் 500 அரசு அலுவலர்கள் பணியாற்றும் நிலையில், அவர்களின் உடல்நலத்தை மேம்படுத்தி, நல்ல ஆரோக்கியத்துடன் பணியாற்றுவதற்கு ஏதுவாக இந்த முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
முகாமை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா நேரில் தொடங்கி வைத்து பார்வையிட்டதுடன், அரசு அலுவலர்களின் நலனில் நிர்வாகத்தின் அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார்.
பொது மருத்துவம் மட்டுமின்றி காது, மூக்கு, தொண்டை, கண், எலும்பு, இருதயம், நீரிழிவு, மகளிர் மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவுகளில் மருத்துவப் பரிசோதனைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டுள்ளன. மேலும், 23 வகையான ரத்தப் பரிசோதனைகள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
“அலுவலர்களின் நலன் – நிர்வாகத்தின் பலம்” என்ற அடிப்படையில் செயல்பட்டுள்ள மாவட்ட ஆட்சியரின் இந்த முயற்சி, அரசு அலுவலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பணிச்சுமைக்கு மத்தியில் அலுவலர்களின் உடல்நலத்தையும் கருத்தில் கொண்டு மருத்துவ முகாம் நடத்தப்படுவது, மனிதநேயத்துடன் கூடிய நிர்வாக அணுகுமுறைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக பார்க்கப்படுகிறது.
மேலும், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறுதல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுதல் குறித்து மருத்துவர்கள் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகளின் சிறப்பு மருத்துவர்கள், பொது சுகாதாரத்துறை மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்று சிகிச்சை அளித்துள்ளனர்.
அரசு அலுவலர்களை வெறும் பணியாளர்களாக பார்க்காமல், அவர்களின் ஆரோக்கியத்தையும் நலனையும் பாதுகாக்க வேண்டிய மனிதர்களாக அணுகும் மதுரை மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கை, பாராட்டத்தக்க நிர்வாக முன்னுதாரணமாக அமைந்துள்ளது.