அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தோல்வி பயத்தாலேயே த.வெ.க.வை விமர்சிக்கிறார் என த.வெ.க. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வை விஜய் விமர்சித்த நிலையில், விஜய்க்கு ஒன்றும் தெரியாது, அவர் முதலில் செய்தியாளர்களைச் சந்திக்கட்டும் என எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் இதுபற்றி செங்கோட்டையன் கூறியதாவது,
அவர்கள் தோல்வி பயம் ஏற்பட்டால் மட்டும்தான் இதுபோன்ற கருத்துகளைப் பரிமாறிக் கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் தி.மு.க.வின் பி- டீமாக யார் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அவர் போல நானும் கருத்து சொல்ல விரும்பவில்லை, அவர் என்னவேண்டுமானாலும் சொல்லட்டும். ஆனால், தோல்வி பயம் ஏற்பட்ட காரணத்தினால்தான் எடப்பாடி பழனிசாமி அவ்வாறு பேசிக்கொண்டிருக்கிறார். தேர்தல் அறிக்கை மொத்தமாக கொடுக்கப்பட வேண்டியது. ஆனால், தினமும் சிந்தித்து சிந்தித்து தேர்தல் அறிக்கை வெளியிடும்போதே அவர்கள் எவ்வளவு தோல்வி பயத்தில் இருக்கிறார்கள் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.