சென்னை, தீவுத்திடலில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு மானிய விலையில் இ-ஸ்கூட்டர்கள் வழங்கும் திட்டத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,

தமிழ்நாட்டில் உள்ள அமைப்புசாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்திடவும், அவர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் நல உதவிகள் வழங்கிடவும், தமிழ்நாடு அரசால் 18 அமைப்புசாரா தொழிலாளர்கள் நல வாரியங்கள் அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகின்றன.

தமிழகம் முழுவதும் இணைய சார்ந்த சேவை பணிகளில் ஈடுபட்டுள்ள அமைப்புசாரா கிக் தொழிலாளர்களின் நலனை பாதுகாக்கும் வகையில் அவர்களுக்கென நலவாரியம் அமைக்கப்படும் என்று முதல்வர்மு.க.ஸ்டாலினால் கடந்த 15.08.2023 அன்று சுதந்திர தின உரையில் அறிவிக்கப்பட்டு, அந்த அறிவிப்பிற்கிணங்க தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியம் 26.12.2023 அன்று தோற்றுவிக்கப்பட்டது. இவ்வாரியத்தில் தமிழ்நாடு முழுவதும் 23,687 இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர்.

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் ஓய்வு எடுக்கும் வகையிலும், கைபேசிக்கு மின்னூட்டம் செய்வதற்கும், கழிப்பறை வசதிகளுடன் கூடிய குளிரூட்டப்பட்ட ஓய்வுக்கூடங்கள் சென்னை மற்றும் கோயம்புத்தூர் போன்ற பெருநகரங்களில் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. மேலும், தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் அவர்களுக்கு விபத்து மரணம் மற்றும் விபத்து ஊனத்திற்கு ரூ.5 லட்சம் வரையிலான குழு காப்பீட்டுத் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்றுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் 2,000 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்கும் செலவினத்தில் ரூ.20,000/- மானியமாக வழங்கும் புதிய திட்டம் 2025- 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்திற்கு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் நேற்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்.