தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
தமிழக சட்டசபைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போது, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசினார். அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த சந்திப்பு நடைபெறவில்லை.
இதைத்தொடர்ந்து, நேற்று எடப்பாடி பழனிசாமியை அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த பா.ம.க. தலைவர் அன்புமணி, அ.தி.மு.க.வுடன் கூட்டணியை உறுதி செய்தார். பா.ம.க.வுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்து விட்டதாகவும், இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. பா.ம.க. உடனான கூட்டணியை உறுதியை செய்த எடப்பாடி பழனிசாமி நேற்று டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். ஏற்கனவே, அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வேலுமணி டெல்லியில் முகாமிட்டுள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, பா.ஜ.க.வுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.