சென்னை: கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டங்களில் கலந்து கொள்வதை தடுக்கும் சுற்றறிக்கையை வாபஸ் பெறுவதாக கல்லூரி கல்வித்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி கல்லூரிக் கல்வித் துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘பார்வையில் காணும் அரசு கடிதத்தில், இடதுசாரிக் கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காக்ரோச் ஜனதா கட்சி நடத்தும் போராட்டங்களில் மாணவ, மாணவிகள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளித் கல்வி, உயர் கல்வி, காவல் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே துறை இடைத்தொடர்பு மற்றும் ஒருங்கிணைந்த கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்லூரி கல்வித் துறையின் இந்த சுற்றறிக்கைக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் மாணவர் இயங்கங்கள், இடதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பல இடங்களில் போராட்டங்களும் நடத்தப்பட்டன. இந்த நிலையில், இன்று (ஆகஸ்ட் 19) அதே எண்ணில் வெளியிடப்பட்ட மற்றொரு சுற்றறிக்கையில், ஆகஸ்ட் 17-ஆம் தேதி வெளியிடப்பட்ட முந்தைய கடிதம் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக கல்லூரிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.