ரூ.33 லட்சம் டெண்டர் விவகாரம்: விண்ணப்பிக்க முடியவில்லை என ஒப்பந்ததாரர்கள் புகார் – அதிகாரியுடனான ஆடியோ வைரல்


சென்னை அசோக் நகரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் 22 தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது. இக்குடியிருப்புகளில் ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டு எண் பொருத்தும் பணிக்காக சுமார் ரூ.33 லட்சம் மதிப்பில் டெண்டர் விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த டெண்டருக்கான விண்ணப்ப காலக்கெடு நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், டெண்டர் தொடர்பான தகவல்கள் நேற்று தான் புதுப்பிக்கப்பட்டதாகவும், அதன்பின்னரும் பல ஒப்பந்ததாரர்களால் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.


டெண்டருக்கு விண்ணப்பிக்க நேற்று முதல் பல ஒப்பந்ததாரர்கள் முயற்சி செய்ததாகவும், தொழில்நுட்ப ரீதியாக விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ஒப்பந்ததாரர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டுள்ளனர்.


அப்போது, **குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே இந்த டெண்டரில் விண்ணப்பிக்க முடியும்** என அதிகாரி தெரிவித்ததாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. டெண்டர் அறிவிப்பு பொதுவாக வெளியிடப்பட்டுள்ள நிலையில், குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு மட்டும் விண்ணப்பிக்க அனுமதி வழங்கப்படுவது எவ்வாறு சாத்தியம் என கேள்வி எழுப்பியபோது, அதிகாரி உரிய விளக்கம் அளிக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.


இதற்கிடையே, ஒப்பந்ததாரர் ஒருவர் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் பேசியதாகக் கூறப்படும் ஆடியோ பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை மற்றும் அதில் இடம்பெறும் உரையாடலின் முழுமையான பின்னணி ஆகியவை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படாத நிலையில், டெண்டர் நடைமுறை குறித்து பல்வேறு கேள்விகளை அது எழுப்பியுள்ளது.


தமிழ்நாடு வெற்றிக்கழக அரசு பொறுப்பேற்ற பின்னர் அரசு டெண்டர் நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை கடைப்பிடிக்கப்படும் என்றும், தகுதியுள்ள அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் விஜய் தெரிவித்திருந்ததாக குறிப்பிடும் ஒப்பந்ததாரர்கள், தற்போது குறைந்த மதிப்பிலான டெண்டரிலேயே பலர் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டிருப்பது கவலைக்குரியது என தெரிவிக்கின்றனர்.


ரூ.33 லட்சம் அளவிலான டெண்டரிலேயே தகுதியுள்ள ஒப்பந்ததாரர்கள் அனைவரும் விண்ணப்பிக்க முடியாத சூழல் ஏற்பட்டதாக புகார் எழுந்தால், எதிர்காலத்தில் பல கோடி ரூபாய் மதிப்பிலான பெரிய டெண்டர்கள் எவ்வாறு வெளிப்படையாக நடத்தப்படும் என்ற கேள்வியும் ஒப்பந்ததாரர்கள் மத்தியில் எழுந்துள்ளது.


இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், டெண்டர் அறிவிப்பு, தகுதி நிபந்தனைகள், விண்ணப்பிக்கும் தொழில்நுட்ப வசதி உள்ளிட்ட அனைத்தும் வெளிப்படையாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்றும் ஒப்பந்ததாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும், சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடத்தப்பட்டு, டெண்டர் நடைமுறையில் விதிமீறல் ஏதேனும் நடைபெற்றுள்ளதா என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. இதனை அடுத்து டெண்டர் ரத்து செய்யப்பட்ட விபரம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது