தமிழக சட்டசபைக்கு இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த சூழலில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி கட்சிகளின் முதல் பிரச்சார பொதுக்கூட்டம் மதுராந்தகத்தில் நாளை 23-ம் தேதி நடக்கிறது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசுகிறார். கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பேச இருக்கிறார்கள். எனவே கூட்டணியை இறுதிப்படுத்தும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

தற்போது வரை அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க. (அன்புமணி), த.மா.க., புதிய நீதிக் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி இடம்பெற்றுள்ளது. கூட்டணியில் தே.மு.தி.க., அ.ம.மு.க.வை சேர்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் அ.தி.மு.க. - பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைவதாக அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது:-

அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்கும் நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். பழைய விஷயங்களை நினைத்துக் கொண்டு கட்சி மற்றும் தமிழக நலனை பின்னுக்கு தள்ளிவிடக் கூடாது. எங்களுக்குள் நடப்பது பங்காளி சண்டைதான். விட்டுக் கொடுப்பவர் கெட்டுப் போவதில்லை. இன்னா செய்தாரை ஒறுத்தல் என்ற வள்ளுவரின் வாக்குப்படி கூட்டணியை முடிவு செய்துள்ளோம். மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழகத்தில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம். தமிழகத்தில் நல்லாட்சி அமைய உறுதுணையாக இருப்போம். இவ்வாறு அவர் கூறினார்.