தமிழகத்தில் ஓரிரு மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கட்சிகளிடையே கூட்டணி பேச்சுவார்த்தை தீவிரமாக நடைபெற்று வருகிறது. வரும் தேர்தலில் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி மீண்டும் உருவாகியுள்ள நிலையில் அதில் பா.ம.க.வின் அன்புமணி தரப்பு இணைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் மீண்டும் இணைந்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய போது இதனை உறுதிப்படுத்தினார்.
இந்த நிலையில் டிடிவி தினகரன் நேற்று சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலைச் சந்தித்து பேசினார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பியூஸ் கோயல் கூறியதாவது,
கூட்டணியில் அ.ம.மு.க. இணைந்தது தனிப்பட்ட முறையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது ஊழல் நிறைந்த தி.மு.க.வை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை உள்ளது.தமிழ் கலாசாரம் மக்களுக்கு எதிராக தி.மு.க .உள்ளது. பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான நல்லாட்சியை தேசிய ஜனநாயக கூட்டணி வழங்கும்.ஜெயலலிதா தலைமையில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருந்தது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழங்கிய நல்லாட்சியை வழங்குவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.