சிங்காநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட 6 தொகுதிகளின் தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து விலகுவதாக தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை திடீரென அறிவித்துள்ளார். தனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவரை உடனிருந்து கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது,

வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் நான் போட்டியிடுவேனா என்று தெரியவில்லை. அதற்கு காலம் தான் பதில் சொல்லும். கட்சி மேலிடம் முடிவு செய்யும். மேலும், எனது தந்தையின் உடல்நிலை சரியில்லாததால் சிங்காநல்லூர், காரைக்குடி உள்ளிட்ட 6 தொகுதிகளின் பாஜக தேர்தல் சுற்றுப்பயண பொறுப்பாளர் பணியிலிருந்து நான் விலகுகிறேன். இது குறித்து கட்சித் தலைவர் நயினார் நாகேந்திரனிடமும் தெரிவித்திருக்கிறேன்.

அண்மையில் தாக்கலான மத்திய பட்ஜெட் யாரும் குறை சொல்ல முடியாதளவுக்கு உள்ளது. ஒவ்வொரு ஆண்டுமே மத்திய பட்ஜெட் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் அ.தி.மு.க. தலைமையில் தான் தேசிய ஜனநாயக கூட்டணி களம் காண்கிறது. எடப்பாடி பழனிசாமி தான் எங்களின் முதல்வர் வேட்பாளர்.

தொண்டர்களிடம் கைத்தட்டல், விசில் வாங்க வேண்டும் என்கிற அடிப்படையில் தான் விஜய் பேசுகிறார். இதுவரை கட்சிகள் செய்யாத என்ன திட்டத்தை கொண்டு வரப் போகிறோம் என்று மக்களை சிந்திக்க வைக்கும் வகையில் விஜய் எதுவும் பேசவில்லை. அவரின் பேச்சைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. விஜய் வெளியே வந்து வீதி வீதியாக பிரச்சாரம் செய்து மக்கள் ஏற்று கொண்டால் பார்க்கலாம். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.