பாலியல் குற்றவாளியுடன் தொடர்பில் இருந்த முன்னாள் அதிபர் கிளிண்டன், அவரது மனைவி ஹிலாரி ஆகியோர் அரசு குழு முன்னிலையில் வாக்குமூலம் அளிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், இரண்டு முறை அதிபர் பதவி வகித்தவர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியில் இன்னும் செல்வாக்குடன் இருக்கிறார். அவரது மனைவி ஹிலாரி கிளிண்டன், வெளியுறவு துறை அமைச்சராக பதவி வகித்தவர். இந்த தம்பதிக்கு பாலியல் குற்றவாளி எப்ஸ்டீன் உடன் தொடர்பு இருப்பது விசாரணை ஆவணங்கள், படங்கள், வீடியோக்கள் மூலம் தெரியவந்தது.

இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கிளிண்டன் மீது பார்லி.யை அவமதித்து விட்டதாக விவாதிக்கவும், ஓட்டெடுப்பு நடத்தவும் ஆளும் கட்சி தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. இதற்கிடையே தங்கள் முன்னிலையில் கிளிண்டன் தம்பதி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று அமெரிக்க அரசின் கண்காணிப்பு குழுவும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.

இந்த குழுவின் அதிகாரிகள் கிளிண்டன் தம்பதியின் வக்கீல்களுடன் பேச்சு நடத்தினர். இதில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க கிளிண்டன் தம்பதி ஒப்புக் கொண்டனர். பார்லி.யில் அசிங்கப்படுவதை தவிர்க்கவே இவ்வாறு வாக்குமூலம் அளிப்பதற்கு கிளிண்டன் தம்பதி முன்வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.