அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2021 தேர்தல் நேரத்தில் தி.மு.க. சார்பில் ஸ்டாலின் அளித்த 525-க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளில், நான்கில் ஒரு பங்கைக்கூட நிறைவேற்றவில்லை என்ற உண்மையை, மக்களுக்கு நாங்கள் நாள்தோறும் சொல்லி வருகிறோம். மத்திய அரசிடம் வாதாடியோ, போராடியோ, இணக்கமாகப் பேசியோ, தமிழக மக்களுக்குத் தேவையான எந்தவொரு நல்ல திட்டங்களையும் கொண்டுவர ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஒன்றிய அரசு கேட்டதைத் தரவில்லை என்று வாய்ஜாலம் காட்டிக்கொண்டிருக்கிறது.

தி.மு.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், மீண்டும் ஆட்சிக்கு வருவோம். திமுக-வின் 2.0 ஆட்சியில் தமிழகம் சுபிட்சம் பெறும் என்றெல்லாம் மக்களின் காதுகளில் காகிதப் பூ சுற்றி வருகிறார் ஸ்டாலின். வரும் சட்டமன்றத் தேர்தலில் தனக்கு தோல்வி நிச்சயம் என்பதை ஸ்டாலின் நன்கு உணர்ந்துள்ளார். அதன் விளைவு, அரசியல் ரீதியாக, நாகரீகமாக களத்தில் எதிர்த்து நிற்கும் அரசியல் தலைவர்களை தனிப்பட்ட முறையில் தாக்குவதும், தரக்குறைவாகப் பேசுவதும் ஸ்டாலினின் வாடிக்கையாகி விட்டது. தான் வகிக்கும் பதவிக்கு உள்ள கௌரவத்தையும், மரியாதையையும், தகுதியையும் எண்ணிப் பார்க்காமல் உளரித் திரிவதை, ஸ்டாலின் இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழக மக்களை, தேர்தல் களத்தில் நெஞ்சுரத்தோடு தலை நிமிர்ந்து அ.தி.மு.க. சந்திக்கும். கடந்த ஐந்தாண்டுகால தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக என்னென்ன திட்டங்களை செயல்படுத்தி உள்ளீர்கள் என்பதை வெளிப்படையாக மக்களிடம் தெரிவித்து, ஓட்டு கேட்க ஸ்டாலின் தயாரா? அப்படி அவர் களத்திற்கு வந்தால், அவருக்கு கிடைக்கப் போவது 2.0 அல்ல – வெறும் 0-தான். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.