சென்னை திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட 550 நபர்களுக்கு அமைச்சர் சேகர்பாபு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

இந்து சமய மற்றும் அறநிலைத்துறை துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, மேயர் பிரியா தலைமையில், பெருநகர சென்னை மாநகராட்சி, திரு.வி.க.நகர் மண்டலம், சோமசுந்தரம் லைன் பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் வார்டு -74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு சமத்துவப் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்கினார்.

திரு.வி.க.நகர் மண்டலம் வார்டு-74க்குட்பட்ட சோமசுந்தரம் லைன் பகுதியில் சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கலந்து கொண்டு அனைத்து சமூக மக்கள் வைத்து கொண்டாடிய சமத்துவ பொங்கல் விழாவில் பங்கேற்றார். மாட்டுப் பொங்கலை சிறப்பித்திடும் வகையில் பசு மாடு மற்றும் கன்றுகளுக்கு இனிப்பு கரும்பு மற்றும் பழங்களை வழங்கினார்.

பொங்கல் திருநாளில் முக்கிய விளையாட்டான உறியடி விளையாட்டினை மேயர் பிரியா உறியடித்து தொடங்கி வைத்தார். பின்னர், வார்டு-74க்குட்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உட்பட மொத்தம் 550 நபர்களுக்கு வேட்டி, சேலை, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு மற்றும் நெய் உள்ளடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வண்டியினை வழங்கி அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களை அமைச்சர் தெரிவித்தார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.