கேரளாவின் வளர்ச்சிக்காக மத்திய அரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

கேரளா சென்ற பிரதமர் மோடி பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அவர் திருவனந்தபுரத்தில் 3 அம்ரித் பாரத் ரயில்கள் உட்பட 4 புதிய ரயில்கள் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். தாம்பரம் - திருவனந்தபுரம், நாகர்கோவில் - மங்களூர், திருவனந்தபுரம் - சார்லப்பள்ளி இடையே 3 ரயில்கள் இயக்கப்படுகின்றன.

பின்னர் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, கேரளாவின் வளர்ச்சிக்கான மத்திய அரசின் முயற்சிகள் புதிய உத்வேகத்தை பெற்றுள்ளன. கேரளாவின் ரயில் இணைப்பு இன்று(நேற்று)முதல் மேலும் வலுப்படுத்தப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தை நாட்டின் முக்கிய ஸ்டார்ட் அப் நிறுவனத்தின் மையமாக மாற்ற குறிப்பிடத்தக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க கூட்டு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தெரு வியாபாரிகளின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. பொருட்களை வாங்குவதற்காக அவர்கள் பெரும்பாலும் மிக அதிக வட்டி விகிதத்தில் சிறிய தொகையை கடனாக பெற வேண்டியிருந்தது. முதன் முறையாக மத்திய அரசு பி.எம். ஸ்வநிதி யோஜனா என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் லட்சக்கணக்கான தெரு வியாபாரிகள் வங்கி கடன்களை பெற்றனர். அவர்களில் பலர் தங்கள் வாழ்நாளில் முதல் முறையாக கடன் பெற்றனர். ஒருபடி மேலே சென்று மத்திய அரசு தெரு வியாபாரிகளுக்கென்றே பிரத்யேகமாக ஒரு கடன் அட்டையையும் அறிமுகப்படுத்தியது. இங்கு பயனாளிகளுக்கு பி.எம். ஸ்வநிதி கடன் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்குவதற்காக நாடு முழுவதும் ஒன்றிணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த வளர்ச்சியில் நமது நகரங்கள் முக்கிய பங்கு வகித்துள்ளன. கடந்த 11 ஆண்டுகளாக நமது அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பில் குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளது. கேரளாவின் வளர்ச்சிக்காக மத்தியஅரசு செய்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்க தொடங்கி உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.