திருவாரூர்: தமிழ்த்தாய் வாழ்த்தை 3-தாக பாடுவதை அவமானமாக எடுத்துக் கொள்ள கூடாது என்று துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் 11-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தர் பத்மநாபன் தலைமை வகித்தார், துணைவேந்தர் சுலோச்சனா சேகர் வரவேற்றார், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸவநாத் அர்லேக்கர், நாகை எம்.பி செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில், குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தங்கப் பதக்கம் வென்ற 50 மாணவ, மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி பாராட்டினார். அதனை தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் 1,053 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர்.
பின்னர் விழாவில் பேசிய குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், “ நான் செல்லும் பல்வேறு பட்டமளிப்பு விழாக்களில் ஆண்களை விட அதிக எண்ணிக்கையில் பெண்கள் பட்டங்களை பெறுகின்றனர். இது வரவேற்கக் கூடிய ஒன்று. பட்டம் பெறும் மாணவர்கள், வகுப்பறைகளை விட்டு வெளியேறினாலும், கற்றலை ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. இன்று பெறும் பட்டம், வாழ்நாள் முழுவதும் தொடரும் அறிவுத் தேடலின் தொடக்கம் மட்டுமே. எந்த தொழிலை தேர்ந்தெடுத்தாலும், நாட்டின் வளர்ச்சிக்கு உதவிட வேண்டும்.
இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த காவல் துறை இது தொடர்பான குற்றவாளிகள் மீது எந்த ஒரு கருணையும் காட்டக் கூடாது. இளைஞர்கள் ஒவ்வொருவரும் போதைப் பொருட்களை தவிர்ப்பது மட்டுமல்லாது, உங்கள் நண்பர்களும் போதைப் பொருளிலிருந்து விலகி இருக்க ஊக்கப்படுத்த வேண்டும். தமிழ்த்தாய் வாழ்த்தை மூன்றாவதாக பாடுவதால், அதனை அவமானப்படுத்துவதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. சொந்த நாட்டையும், பெற்ற தாயையும் யாரும் அவமானப்படுத்த மாட்டார்கள் என்பதைப் போல தமிழ்த்தாய் வாழ்த்தையும் மூன்றாவதாக பாடுவதை எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.