தமிழக சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 10-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில் மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்த வாய்ப்பிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. அதில் தி.மு.க. கூட்டணி வென்று ஆட்சியை பிடித்தது. இந்த நிலையில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் மே மாதம் 10-ம் தேதி வரையாகும். எனவே அந்த தேதிக்கு முன்னதாகவே தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்த வகையில் வரும் சட்டசபை தேர்தலுக்காக தமிழகம், புதுவையில் உள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன.
இதனிடையே தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் முழு வீச்சில் நடந்து முடிந்துள்ளன. தற்போது இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ம் தேதி வெளியிடப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, பிப்ரவரி மாதம் 2-வது வாரத்தில் தேர்தல் ஆணையத்தின் உயர்மட்டக் குழு தமிழகத்திற்கு வருகை தரவுள்ளது. இந்தக் குழு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டர்கள், தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளது. மேலும் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குச் சாவடிகள் அமைப்பு, வாக்காளருக்கான வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
அந்த வகையில் பிப்ரவரி மாதம் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தமிழகம் வருவதால் மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும். அது முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வரும். மேலும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்றும் மே மாதத்தில் தேர்தல் முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.