சென்னை: பொது வாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது. மக்கள் நலன் தான் மிக முக்கியமான விஷயம்; அதன் அடிப்படையில் தான் தவெக அரசு செயல்படுகிறது என முதல்வர் விஜய் பேசினார்.
சென்னை கோட்டையில் நடந்த சுதந்திர தின விழாவில் முதல்வர் விஜய் முதன்முறையாக தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார்; விழாவில் முதல்வர் விஜயின் பெற்றோர் சந்திரசேகர், ஷோபா உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக முதல்வர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
விழாவில் முதல்வர் விஜய் பேசியதாவது: தங்களுடைய உயிர், உடமை எல்லாற்றையும் இழந்துவிட்டு நமக்காக சுதந்திரம் வாங்கி கொடுத்த சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவில் வைத்திருக்க வேண்டும். அடிமை மாதிரி வைத்தி இருக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டாலே, மக்கள் மத்தியில் ஒற்றுமை வந்துவிடும். எல்லோரும் ஒரே மாதிரி யோசித்து ஒன்று சேர ஆரம்பிப்பார்கள். அப்படி ஒன்று சேரும் இடத்தில் ஜாதி, மதம், மொழி, இனம் எல்லாம் உடைந்து நொறுங்கும். அப்படி உடைந்து நொறுங்கும் இடத்தில் கிடைப்பது தான் உண்மையான சுதந்திரம். நாம் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வந்து கொண்டு இருக்கிறோம்.
அந்த வளர்ச்சியை அடுத்தடுத்து கட்டத்துக்கு கொண்டு செல்வது நமது எல்லோருடைய கடமை. இந்த நேரத்தில் தமிழகத்தை லஞ்சம், ஊழலில் இருந்து காப்பாற்றுவதும் விடுதலைக்கு சமமான விஷயம் தான்; அதனை நோக்கி தான் நமது அரசு செயல்பட்டு கொண்டு இருக்கிறது. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற கோட்பாட்டை அடிப்படையாக வைத்து தான் தமிழகத்தை லஞ்சம், லாவண்யம் அற்ற , போதைப்பொருள் கலாசாரம் இல்லாத, பெண்கள் பாதுகாப்பு, சமூக நீதி அடிப்படையில் ஒரு வெளிப்படையான, உண்மையான, நேர்மையான நிர்வாகமாக நாம் செயல்பட்டு வந்து கொண்டு இருக்கிறோம்.
பொது வாழ்வில் சமரசம் இருக்கவே கூடாது. மக்கள் நலன் தான் மிக முக்கியமான விஷயம்; அதன் அடிப்படையில் தான் தவெக அரசு செயல்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலும் மத்திய அரசுடன் நிர்வாக ரீதியாக ஒத்துழைப்புடன் இருக்கிறோம். அதேநேரத்தில் தமிழக கொள்கைகள் என்று வந்துவிட்டால், மாநில உரிமைகளுக்கு எதிரான முடிவுகளிலும் சரி, தமிழகத்துக்கு எதிரான கொள்கை முடிவிலும் சரி தவெக அரசு எப்பொழுதும் எதிர்க்கும். அதில் எந்த மாற்றுகருத்தும் கிடையாது.
மக்கள் தான் ஆட்சியாளர்கள், எல்லோரும் சேர்ந்து கடைமையை செய்வோம்; அரசுக்கு எதிரான சதிகளை, சக்திகளை முறியடிப்போம். நீங்கள் எல்லோரும் நம்மோடு இருக்கும் போது என்ன கவலை. நல்லதை மட்டுமே நோக்கி நகர்வோம். நல்லதை மட்டும் நோக்கி நகரும் உங்கள் அரசு, உங்களுடைய எதிர்பார்ப்பு, கருத்துக்களை மனதில் வைத்து கொண்டு தான், நல்ல புதிய அறிவிப்புகளை அறிவிக்க இருக்கிறோம். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.