சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக நடிகர் ஜெயராமுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கை கேரள காவல்துறையின் சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரித்து வருகிறது. மேலும் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கை அமலாக்கத்துறையும் விசாரித்து வருகிறது. சிறப்பு புலனாய்வு பிரிவு விசாரணையில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த இரு வழக்குகளிலும் உன்னிகிருஷ்ணன் போத்தி முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கில் முன்னாள் திருவிதாங்கூர் தேவசம் போர்டு அதிகாரிகளான முராரி பாபு, சுதீஷ்குமார் மற்றும் ஸ்ரீகுமார், உன்னிகிருஷ்ணன் போத்தி ஆகிய 4 பேருக்கு ஜாமீன் கிடைத்தது. ஜாமீன் பெற்ற 4 பேரிடமும் அமலாக்கத்துறையும் விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது. இதற்கிடையே சபரிமலை வழக்கில் நடிகர் ஜெயராம் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.