தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது;-
வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் சென்னை, ஏழுகிணறு, அரசு ஸ்டான்லி மருத்துவமனை அருகில், 147 கோடி ரூபாய் செலவில் நவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்து, வால்டாக்ஸ் சாலை, தண்ணீர் தொட்டி தெருவில் 31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 144 புதிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான கட்டுமானப் பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர், அங்கன்வாடி மையம், நகர்ப்புற நலவாழ்வு மையம், நியாய விலைக் கடைகள், முதல்வர் படைப்பகம், நவீன நூலகம், உடற்பயிற்சிக்கூடம், திறந்தவெளி அரங்கம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி ஆகியவற்றை முதல்வர் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து, நகர்ப்புற குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், நலத்திட்ட உதவிகளையும் பயனாளிகளுக்கு முதல்வர் வழங்கினார். ஒதுக்கீட்டு ஆணைகளை பெற்றுக்கொண்ட பயனாளிகள் முதல்வருக்கு தங்களது நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, எம்.பி.க்கள் தயாநிதி மாறன், டாக்டர் கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ.க்கள் வெற்றியழகன், தாயகம் கவி, ஜோசப் சாமுவேல் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.