மதுரை, ஆக.18: சாலைப்பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் மதுரையில் கோரிக்கை மனு அளிக்கும் இயக்கம் நடைபெற்றது.


மதுரை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த இயக்கத்தில், சாலைப்பணியாளர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.


சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் என்பது முக்கிய கோரிக்கையாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தின் WP.No.24797/2015 வழக்கில் 23.10.2024 அன்று வழங்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.


மேலும், சாலைப்பணியாளர்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் விரைந்து பணி வழங்க வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையத்தை கலைத்து கிராமப்புற இளைஞர்களை சாலைப்பணியாளர்களாக பணிநியமனம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன


அதேபோல், சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்துறையின் பொறியியல் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதிய மாற்றத்தைப் போன்று ரூ.5,200–20,200 ஊதிய விகிதத்துடன் ரூ.1,900 தர ஊதியம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி நடைபெறும் இந்த கோரிக்கை மனு அளிக்கும் இயக்கத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் சாலைப்பணியாளர்கள் திரளாக பங்கேற்க உள்ளனர்.


நிகழ்ச்சிக்கு கோட்டத் தலைவர் மணிமாறன் தலைமை வகித்தார். கோட்ட துணைத்தலைவர் மாரியப்பன் வரவேற்புரை ஆற்றினார். TNGEA மாநிலச் செயலாளர் கு. நீத்ராஜா தொடக்கவுரை நிகழ்த்தினார். கோட்டச் செயலாளர் த. மகேந்திரன் விளக்கவுரை ஆற்றினார். னமேலும், சங்க நிர்வாகிகள், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் துறை நிர்வாகிகள் வாழ்த்துரை வழங்கினர். . நிகழ்ச்சியின் நிறைவில் மாநில பொருளாளர் தமிழ் நிறைவுரை ஆற்றினார் கோட்ட பொருளாளர் பொ. மாணிக்கம் நன்றியுரை வழங்கினார்.


சாலைப்பணியாளர்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு உடனடியாக பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கோரிக்கை இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும்.