சபரிமலையில் வரும் 14-ம் தேதி மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது. இதற்கு முன்னோட்டமாக, எருமேலியில் பாரம்பரிய பக்தர்கள் குழு சார்பில் பேட்டை துள்ளல் ஊர்வலம் நேற்று முன்தினம் நடைபெற்றது. சபரிமலையில் நாளை (ஜன.14) பிரசித்தி பெற்ற மகரஜோதி திருவிழா நடைபெறுகிறது.

இது குறித்து சபரிமலை சிறப்பு அதிகாரி ஏடிஎம்.அருண் எஸ்.நாயர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: நீதிமன்ற உத்தரவுப்படி, இன்று 13-ம் தேதிக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்த 35 ஆயிரம் பக்தர்களும், நாளை 14-ம் தேதியில் 30 ஆயிரம் பக்தர்களும், தலா 5 ஆயிரம் பக்தர்கள் ஸ்பாட் புக்கிங் மூலமும் அனுமதிக்கப்படுவர். பின்னர், 15-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை தினமும் 50 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5 ஆயிரம் பேரும், 19-ம் தேதி 30 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங் மூலம் 5 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுவர் என்று தெரிவித்தார்.

தேவசம்போர்டு அதிகாரிகள் கூறுகையில், புல்மேட்டில் மகரவிளக்கு அன்று தொலைத் தொடர்புக்காக பி.எஸ்.என்.எல். நிறுவனம் தற்காலிக கோபுரத்தை அமைத்துள்ளது. இது நேற்று பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மேலும், சபரிமலை, பம்பா மற்றும் நிலக்கல்லில் உள்ள 30 அவசர மருத்துவ மையங்களில் வைபை வசதியையும் பி.எஸ்.என்.எல். வழங்கியுள்ளது என்றனர்.

கேரள அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறுகையில், திருவிழாவுக்காக ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படும். பம்பை ஹில்டாப் பகுதியில் தனியார் வாகனங்கள் நிறுத்த நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.