கேரளாவை சேர்ந்த பிரபல நடிகர் மணியன்பிள்ளை ராஜூ(70). இவர் மலையாள திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார். 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மணியன்பிள்ளை ராஜூ சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு தனியார் கிளப்பில் இருந்து தனது காரில் வெளியே வந்த போது எதிரே வந்த ஒரு பைக் மீது அவரது கார் மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த 2 இளைஞர்கள் காயமடைந்தனர்.

விபத்தை ஏற்படுத்திய மணியன்பிள்ளை சம்பவ இடத்தில் நிற்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே நேற்று காலை காவல் நிலையத்தில் சரணடைந்த அவர், விபத்து நடைபெற்றதும் அச்சத்தில் அங்கிருந்து சென்று விட்டதாக கூறினார். தனக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதே நேரத்தில் தன்னால் உதவ முடியவில்லை என்றும் மணியன்பிள்ளை தெரிவித்தார். இந்த விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.