தமிழக சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்பது பற்றி தே.மு.தி.க. இன்னும் முடிவெடுக்காமல் உள்ளது. இது தொடர்பாக அந்த கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தூத்துக்குடியில் இன்று(நேற்று) 4-ம் கட்ட பிரச்சார பயணத்தை தொடங்குகிறேன். இந்த பிரச்சாரம் அடுத்த மாதம் 3-ம் தேதி வரை நடைபெறுகிறது. கன்னியாகுமரியில் இருந்து விருதுநகர் வரையிலும் பயணம் மேற்கொள்ள உள்ளோம்.

கேள்வி:- ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் கூட்டணியை இறுதி செய்துள்ளன. தே.மு.தி.க. கூட்டணி முடிவை எடுப்பதில் ஏன் தாமதமாகிறது?

பதில்:- தாமதம் எல்லாம் இல்லை. கூட்டணி தொடர்பாக உரிய நேரத்தில் எல்லோரும் போற்றக்கூடிய நல்ல முடிவை எடுப்பேன்.

கேள்வி:- தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை தே.மு.தி.க. தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறதே?

பதில்:- உரிய நேரத்தில் நல்ல முடிவை நிச்சயம் எடுப்போம்.

கேள்வி:- தே.மு.தி.க. பொருளாளர் எல்.கே.சுதீஷ் முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து பேசி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளதே?

பதில்:- அப்படியெல்லாம் ரகசியம் ஒன்றும் இல்லை. அதுபோல் எதுவும் இருந்தாலும் வெளிப்படையாகவே பேசி கூட்டணி அமைப்போம்.

கேள்வி:- தேசிய ஜனநாயக கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?

பதில்:- அதுவும் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தே.மு.தி.க.வை பொறுத்தவரையில் நிச்சயமாக தமிழ்நாட்டு மக்களின் நலன் கருதி தெளிவான முடிவை எடுப்போம்.

கேள்வி:- தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான கவுண்டவுன் தொடங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறி இருக்கிறாரே? அதனை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில்:- எப்படி இருந்தாலும் தேர்தலுக்கு பிறகு ஒரு ஆட்சி வரத்தான் போகிறது. 2026-ம் ஆண்டில் நல்லது நடக்கும். நல்லாட்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பமாகும். எனவே எல்லோருக்கும் நல்லதே நடக்கும். இவ்வாறு பிரேமலதா கூறினார்.