தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் தொடர்பாக தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கியுள்ளார். அ.தி.மு.க.வில் சட்டமன்ற தொகுதி வாரியாக போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு உள்ளன.

இது போன்று தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு அளித்தவர்களிடம் முதல் கட்ட நேர்காணலை கடந்த 9-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தொடங்கினார். இந்த நேர்காணல் கடந்த 10,12 ,13 ஆகிய தேதிகளில் தொடர்ச்சியாக 4 நாட்கள் நடைபெற்றது. இதன் பிறகு பொங்கல் பண்டிகை விடுமுறை மற்றும் பிரதமர் மோடி பங்கேற்க இருந்த பொதுக் கூட்டம் ஆகியவை இருந்ததால் நேர்காணல் உடனடியாக நடத்தப்படவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொண்டு 5-வது நாள் நேர்காணல் 24-ம் தேதி நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி ராயப்பேட்டை அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நேற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் நேர்காணலை நடத்தினார்.

நேர்காணலில் கலந்து கொள்வதற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை கட்சி அலுவலகத்திற்கு வந்தார். அப்போது அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் தொண்டர்கள் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். நேற்று காலையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, தூத்துக்குடி, தென்காசி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டது. காலை 9.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளிடமும், அதன் பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட அ.தி.மு.க.வினரிடமும் நேர்காணல் நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, தென்காசி வடக்கு, தென்காசி தெற்கு மற்றும் திருவண்ணாமலை வடக்கு திருவண்ணாமலை தெற்கு மாவட்ட நிர்வாகிகளிடமும் எடப்பாடி பழனிசாமி நேர்காணல் நடத்தினார். அதை தொடர்ந்து திருவண்ணாமலை கிழக்கு, திருவண்ணாமலை மத்திய மாவட்ட நிர்வாகிகளுடனும் பிறகு வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகளிடமும் நேர்காணல் நடைபெறுகிறது.