சென்னை: காவிரி விவகாரத்தில் மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை என முதல்வர் விஜய் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இன்று காலை அவை கூடியதும், மறைந்த இயக்குனர் கே.பாக்கியராஜ், பாடகி ஜானகி எழுத்தாளர் புவியரசு, பூமணி ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மேகதாது அணை விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்து எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், தவெக அரசு அமைந்த பின்னர் மேகதாது தடுப்பணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு வேகம் காட்டி வருகிறது. தமிழக அரசு இதுவரை செய்தது என்ன? அனைத்துக்கட்சி கூட்டத்தை விவாதிக்க ஆளும் அரசு தயங்குவது ஏன்? டில்லியில் கர்நாடக முதல்வர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஒரு மாதத்தில் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளனர். நம் மாநிலமும் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்துக் கட்சி கூட்டத்தை எப்போது கூட்ட போகிறீர்கள். மேகதாது விவகாரத்தில் இதுவரை தமிழ்நாடு அரசு மேற் கொண்டுள்ள நடவடிக்கைகளை விளக்க வேண்டும் என்றார்/

இதற்கு பதிலளித்து பேசிய முதல்வர் விஜய், காவிரி நமக்கு உயிர் ஆதாரம். நம்முடைய உணர்வு ரீதியான ஒன்று. அதனை வைத்து அரசியல் செய்யும் எண்ணம் துளி கூட நமது அரசுக்கு இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. மேகதாது விவகாரத்தில் நாம் எல்லோரும் சேர்ந்து தான் தீர்மானம் போட்டோம். அதனை கடிதமாக பிரதமருக்கும் அனுப்பி வைத்து இருக்கிறோம். அதோடு நாம் அப்படியே இருந்துவிடவில்லை. மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி வழங்க கூடாது என்று பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நதி நீர் பங்கீட்டிலும் சரி , மேகதாது அணை கட்டும் முயற்சிகளை தடுப்பதிலும் சரி, தமிழகத்தின் உரிமையை கொஞ்சம் கூட நம்ம அரசு விட்டு தரவே தராது. அது தான் நமது நிலைப்பாடு. காவிரி விவகாரத்தில் மலிவான அரசியல் செய்ய விரும்பவில்லை. அது நமது நோக்கமும் இல்லை. யாருக்கு பெருமை என்று எல்லாம் பார்க்க கூடாது. இது தமிழக மக்களின் பிரச்னை. காவிரி விவகாரம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் உரிய விளக்கம் அளிப்பார். இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.