2025ம் ஆண்டில் அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவில் 62 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளதாக ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

அதிபர் டிரம்ப்பின் குடியேற்ற கொள்கை மற்றும் விசா கெடுபிடி காரணமாக அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவடைந்துள்ளது. இது தொடர்பாக சிஐஎஸ் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 2024ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ம் ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசாக்களின் எண்ணிக்கையில் கணிசமான சரிவு ஏற்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடு, அமெரிக்காவில் வெளிநாட்டினர் பணி செய்ய கட்டுப்பாடு ஆகியவை காரணமாக மாணவர்களுக்கு விசா வழங்குவது சரிந்துள்ளது.

2024ம் ஆண்டில் மாணவர் விசா மூலம் அமெரிக்கா சென்ற இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 58,694 ஆக இருந்தது. இது கடந்த 2025ம் ஆண்டு 22,149 ஆக குறைந்துள்ளது. அதாவது இந்திய மாணவர்களுக்கு வழங்கப்பட்ட விசாவில் 62 சதவீதம் சரிவு ஏற்பட்டுள்ளது. சீன மாணவர்களுக்கு வழங்கப்படும் அமெரிக்க விசாவிலும் சரிவு ஏற்பட்டுள்ளது. 2024ல் 61,075 சீன மாணவர்களுக்கு அமெரிக்கா விசா வழங்கியது. இது 2025ல் 40,034 ஆக சரிந்துள்ளது. சர்வதேச கல்வி நிறுவனம் நடத்திய வருடாந்திர கணக்கெடுப்பின்படி, 2024-25 கல்வியாண்டில், அமெரிக்காவில் உயர்கல்வி படித்த வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை 53 சதவீதம் சரிந்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.