முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சுரேஷ் கல்மாடி காலமானார். அவருக்கு வயது 81.
முன்னாள் ரயில்வே இணை அமைச்சரான சுரேஷ் கல்மாடி, இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராகவும் இருந்துள்ளார். மகராஷ்டிராவின் புனே நகரைச் சேர்ந்த இவர், அந்த தொகுதியின் எம்.பி.யாக பலமுறை இருந்துள்ளார். நீண்ட காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுரேஷ் கல்மாடி, நேற்று அதிகாலை 3.30 மணி அளவில் காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருக்கு மனைவி, ஒரு மகன், மருமகள், திருமணமான இரண்டு மகள்கள் உள்ளனர்.
சுரேஷ் கல்மாடியின் உடல் புனேவில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று மதியம் 2 மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அதை தொடர்ந்து இறுதிச் சடங்குகள் மாலை 3.30 மணிக்கு நடைபெற்றது. சுரேஷ் கல்மாடியின் மறைவை அடுத்து, கட்சி பாகுபாடு இன்றி பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.