சிவகாசி, அக். 10-
‘’காகித தட்டுப்பாடு காரணமாக காலண்டர் விலை 40 சதவீதம் வரை உயர வாய்ப்பு உள்ளது. எனவே காகித ஏற்றுமதிக்கு தடை விதிப்பதுடன், இறக்குமதிக்கு வரி சலுகை அளிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் ‘’என தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகாசியில் தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியா
ளர்கள் சங்க தலைவர் ஜெயசங்கர் கூறியதாவது:
கடந்தாண்டை ஒப்பிடும் போது இந்த ஆண்டு 15 சதவீதம் காகித விலை உயர்வுடனேயே காலண்டர் உற்பத்தி தொடங்கியது. தற்போது மீண்டும் 15 சதவீதம் விலை உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டு காகித விலை ஒரு டன் ரூ.53 ஆயிரமாக இருந்த நிலையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரூ.60 ஆயிரமாகவும், தற்போது ரூ.64 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது. அடுத்த சில நாட்களில் விலை டன்னுக்கு ரூ.70 ஆயிரத்திற்கு மேல் உயர வாய்ப்புள்ளதாக காகித நிறுவனங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்காட்டி வில்லை
களுக்கான போஸ்டர் காகிதம் கடந்த காலங்களில் 70 சதவீதம் மறுசுழற்சி மூலமும், 30 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. தற்போது 90 சதவீதம் அதனை இறக்குமதி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. காகித கூழ் விலை உயர்வு, கப்பலில் வரும் போக்குவரத்து செலவு காரணமாக காகித விலை உயர்ந்துள்ளதாக காகித ஆலைகள் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா ஊரடங்கு காலம் போல் காகிதத்திற்கு தட்டுப்பாடு , விலை உயர்வு காரணமாக 30 சதவீதம் அச்சகங்கள் மூடப்பட்டுள்ளன. இதே நிலை தொடர்ந்தால் சிறு, குறு அச்சு நிறுவனங்கள் அனைத்தும் அழிவின் விளிம்பில் சென்று விடும்.
நாடு முழுவதும் உள்ள 2 லட்சம் அச்சகங்கள் , அதனை சார்ந்து இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஜி.எஸ்.டி., விதிப்பு இரு அடுக்குகளாக குறைக்கப்பட்ட போது, 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்ந்து விட்டது. அதை 5 சதவீத வரி அடுக்கில் கொண்டு வர மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளோம். மத்திய அரசு காகித ஏற்றுமதியை தடை செய்வதோடு, இறக்குமதி செய்யப்படும் காகிதம் தொடர்பான பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும். அதை செய்தால் மட்டுமே அச்சகங்களை காக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.