சென்னை, அக். 10-

தென்கிழக்கு வங்கக் கடலில் வருகிற 13ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழகம் – தெற்கு ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. கடந்த வாரத்தில் நாடு முழுவதும் பதிவான மழைப்பொழிவு, நீண்ட கால சராசரியை விட 72 சதவீதம் குறைவாக இருந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அக்டோபர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 7ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், நாடு முழுவதும் பதிவான ஒட்டுமொத்த மழையின் அளவு இயல்பான அளவை விட 72 சதவீதம் குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, நாளை (11-ந்தேதி) அந்தமான் கடற்பரப்பின் மேல் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி ஒன்று உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக, அக்டோபர் 13ஆம் தேதி வாக்கில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

இது அடுத்த 4 நாட்களில் மேலும் வலுவடைந்து, வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரக் கடற்கரையை நோக்கி வரக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதனால் தமிழகம் மற்றும் புதுவை, ஆந்திராவின் கடலோரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலோடு கூடிய கனமழை முதல் மிக கனமழை பெய்யக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகரக்கூடும். அதே சமயம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு குறைவு என்று கூறியுள்ளது.