கம்பம்-கூடலூர் புறவழிச்சாலை ஓரங்களில் தொடர்ந்து மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால், அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொதுவாக மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசிகள், சிரிஞ்சுகள், குளுகோஸ் மற்றும் சிறுநீர் குழாய்கள், மருத்துவ துணிகள், பஞ்சுகள், கையுறைகள், காலாவதி மருந்துகள் ஆகியவற்றை முறையாக சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கழிவு சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
இந்த நிலையில், கம்பம்-கூடலூர் புறவழிச்சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலின்பேரில், தேனி மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய சுற்றுச்சூழல் பொறியாளர் விஜய்பிரியா, பறக்கும் படை அதிகாரி தினகரன், வட்டார மருத்துவ அலுவலர் முருகன் மற்றும் கம்பம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோர் கம்பம் புறவழிச்சாலையில் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்ட இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், அங்கு கிடந்த அட்டைப்பெட்டிகள் மற்றும் மருத்துவ ஆவணங்கள் மூலம் சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து, சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்துக்கு நகராட்சி சுகாதாரத் துறை அபராதம் விதிக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும், அங்கு கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் சேகரிக்கப்பட்டு, தேனியில் மருத்துவக் கழிவுகளை சுத்திகரிக்கும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்கள், கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மருத்துவக் கழிவுகளை உரிய முறையில் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.