தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கிடையே ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து கருத்து தெரிவிக்க தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.
பாராளுமன்ற மக்களவை, மாநில சட்டப்பேரவை, நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது குறித்து ஆய்வு செய்து விரைவில் பரிந்துரைகளை வழங்க எட்டு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை கடந்த ஆண்டு செப்டம்பர் 2-ம் தேதி மத்திய அரசு அமைத்தது. முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில், உள்துறை அமைச்சர் அமித்ஷா, ராஜ்யசபா முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், நிதி ஆயோக் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் சி.காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
இந்த குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும் கருத்துக்களை கேட்டு வந்தது. இந்த நிலையில், ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம் சமர்ப்பித்தது. ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி மாதம் 20-ம் தேதிக்கு பிறகு தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலுக்கு தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன. இந்த நிலையில் மத்திய அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை அறிமுகம் செய்ய ஆர்வமாக உள்ளது.
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் தமிழக அரசுக்கு முக்கிய கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து தமிழக அரசு தனது கருத்துகளை தெரிவிக்க வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.