எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு, திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சமத்துவப் பொங்கல் விழா கொண்டாட்டம் களைகட்டியுள்ளது. இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு அலுவலர்கள் பங்கேற்ற சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு, தலைமைச் செயலக அலுவலர்களுடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். அதனைத் தொடர்ந்து, முதல்வர் நாதஸ்வர இசை நிகழ்ச்சியை கேட்டு ரசித்தார். மேலும், தலைமைச் செயலாளர், துறைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், அரசு உயர் அலுவலர்கள் மற்றும் தலைமைச் செயலக அலுவலர்களுக்கு பொங்கல் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.
இதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க ஸ்டாலின் சமத்துவப் பொங்கல் விழாவில் உரையாற்றினார். அப்போது அவர், தமிழ்நாடு முழுவதும் நாம் சமத்துவப் பொங்கலை கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். எல்லார்க்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்திடும் நோக்கத்தோடு, நம்முடைய திராவிட மாடல் அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்ல வேண்டும் என்றால், உழைத்துக் கொண்டிருக்கிறது. உழைத்துக் கொண்டிருப்பவர்கள் என்று சொன்னால், நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள்.
தமிழக மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக தலைமைச் செயலகத்தில் நீங்கள் எல்லோரும் நேரம், காலம் பார்க்காமல், உழைத்துக் கொண்டிருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உங்களோடு, இந்த பொங்கலை கொண்டாடுவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த மகிழ்ச்சி, உங்கள் உள்ளங்களிலும், உங்களுடைய இல்லங்களிலும், பொங்கட்டும் பொங்கட்டும் என்று இந்த இனிய நேரத்தில் எடுத்துச் சொல்லி, உங்கள் அனைவருக்கும் என்னுடைய பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசினார்.