தமிழக சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில் அரசியல் களம் தற்போதே சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க. ஆகியவை இடம்பெற்றுள்ளது. இந்தசூழலில், கூட்டணியில் உள்ள பா.ஜ.க. மற்றும் பா.ம.க.வுக்கு எத்தனை சீட்டுகள் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அந்தந்த கட்சியினர் இடையே ஏற்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தல் போலவே இந்த முறையும் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. கடந்த முறை 20 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ஜ.க. 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால், இந்த முறை 56 தொகுதிகள் கேட்பது மட்டும் அல்லாமல், ஆட்சியிலும் பா.ஜ.க. பங்கு கேட்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பிறகு புறப்பட்ட நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடி இந்த மாதம் இறுதியில் தமிழகம் வருகிறார். சென்னை அல்லது மதுரையில் பொதுக்கூட்டம் நடைபெறும். தேதி இன்னும் இன்னும் முடிவாகவில்லை. தொகுதி பங்கீடு குறித்து அ.தி.மு.க.வுடன் நடந்த பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவடைந்துள்ளது. பா.ஜ.க. எத்தனை தொகுதிகளில் போட்டி என்பதை பின்னர் கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.