சென்னை: “தவெக அமைச்சர்கள் துறை சார்ந்த பதிலை அளிக்க மறுப்பதாகக் கூறி சட்டசபையில் இருந்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி தலைமையில் வெளிநடப்பு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “கோவையில் மாணவர் அமுதன் என்பவர் 10 நாட்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்துகின்ற கும்பலால் படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதே போல், திருவொற்றியூரில் இதேபோல தனுஷ் என்ற மாணவர், 20 பேர் கொண்ட ஒரு கும்பலால் தாக்கப்பட்டு பட்டப்பகலில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார். இப்படித் தொடர்ந்து போதைப்பொருளால் இன்றைக்குப் பல்வேறு சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் ஏற்பட்டு இருக்கின்றன. இதையெல்லாம் சுட்டிக்காட்ட வேண்டும் என்று இந்த அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்வதற்காக இன்றைக்கு நாம் மட்டுமல்ல, எதிர்க்கட்சித் தலைவர்கள், அனைத்துக் கட்சித் தலைவர்களும் சட்டமன்றத்தில் அரசின் கவனத்தை ஈர்த்துப் பேசியிருக்கிறோம்.

ஆனால், இதற்கெல்லாம் எந்தவிதமான ஒரு சரியான பதிலும் இந்த அரசிடம் இல்லை. மாறாக எங்கள் மீது மீண்டும் குற்றச்சாட்டு வைக்கிறார்கள். தங்களது ஆட்சியில் என்ன செய்தீர்கள் என்று ஒரு தெளிவான விளக்கம் இல்லாமல், எங்கள் மீது மீண்டும் பழியைப் போடுகின்ற வழக்கத்தையே இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், இந்த அரசில் அந்தந்தத் துறை அமைச்சர்கள் அந்தந்த துறைக்கான பதிலையே சொல்ல மறுக்கிறார்கள்.

இன்றைக்கு சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம், போதைப் பொருள் தடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டு இருக்கிறோம். இதற்கு முழுப் பொறுப்பேற்க வேண்டியவர் யார் என்பது மக்களுக்குத் தெரியும். அந்த அமைச்சர் இன்றைக்கு அவைக்கு வரவே இல்லை. அதற்கான பதிலையும் அவர் சொல்லவே இல்லை. இதையெல்லாம் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகம் இன்றைக்கு வெளிநடப்பு செய்திருக்கிறோம்.” என்றார்.