ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் என்று அமெரிக்க தூதரகம் அவசரமாக அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக அமெரிக்க தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ஈரானில் பதற்ற சூழல் அதிகரித்து வருகிறது. அங்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்படுதல், போக்குவரத்து இடையூறுகள், தடுத்து வைக்கப்படும் அபாயங்கள் அதிகரித்து வருவதால், அமெரிக்க குடிமக்கள் ஈரானை விட்டு வெளியேற அறிவுறுத்தப்படுகிறது. அமெரிக்க குடிமக்கள் ஈரானில் விசாரணை, கைது மற்றும் தடுப்புக்காவல் அபாயத்திற்கு உள்ளாகக்கூடும். அங்கு அமெரிக்க குடிமக்கள் தொடர்ந்து இணைய தடைகளையும் எதிர்கொள்ளலாம்.
விமானங்கள் ரத்து மற்றும் இடையூறுகள் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஈரானில் இருந்து வெளியேற முடியாதவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும். உணவு, தண்ணீர் மற்றும் மருந்துகளை போதுமானதாக வைத்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்து உள்ளது. ஈரான் மீது அமெரிக்கா எந்த நேரத்திலும் தாக்குதல் நடத்தலாம் என்ற சூழல் நிலவும் நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பு மத்திய கிழக்கில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.