அமெரிக்கா - ரஷ்யா அணு ஆயுதங்களை கட்டுப்படுத்தும் அல்லது குறைக்கும் நோக்கில், 2010-ம் ஆண்டு நியூ ஸ்டார்ட் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். இந்த ஒப்பந்தம் 2021-ம் ஆண்டு வாக்கில் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையே அணு ஆயுத ஒப்பந்தம் நேற்று முன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. ஒப்பந்தத்தை நீட்டிக்க ரஷ்யா விரும்பியது. ஆனால் அதை அதிபர் டிரம்ப் ஏற்கவில்லை.
இதனால் இரு நாடுகள் இடையேயான அணு ஆயுத ஒப்பந்தம் காலாவதியாகியுள்ளது. இதுதொடர்பாக ரஷ்ய அதிபர் புடினின் செய்தித் தொடா்பாளா் டிமிட்ரி பெஸ்கோவ் கூறும் போது, இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வருவது மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இந்த விஷயத்தில் ரஷ்யா மிகுந்த பொறுப்புடனும் கவனத்துடனும் செயல்படும். அதேநேரம், எங்களின் தேச நலன்களுக்கே எப்போதும் முன்னுரிமை அளிக்கப்படும் என்றாா்.
இந்த நிலையில் டிரம்ப் தனது சொந்த சமூக வலைத்தளத்தில், நீண்ட காலம் நீடித்து நிலைக்கக்கூடிய புதிய ஒப்பந்தத்தை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்த பதிவில், நமது அணுசக்தி வல்லுநர்களைக் கொண்டு, எதிர்காலத்தில் நீண்ட காலம் நீடித்து நிலைக்கக்கூடிய ஒரு புதிய, மேம்படுத்தப்பட்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்க நாம் பணியாற்ற வேண்டும் என டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.