ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்திருக்கின்றனர். இந்தத் தகவலை ராம் சரணின் தந்தையும், டாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் நடிகருமான சிரஞ்சீவி சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருக்கிறார். ராம் சரண் - உபாசனா தம்பதிக்கு கடந்த 2012-ல் திருமணம் நடைபெற்றது. இந்தத் தம்பதிக்கு கடந்த 2023-ம் ஆண்டு ஒரு பெண் குழந்தை பிறந்திருந்தது.
தற்போது இந்தத் தம்பதிக்கு ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை என இரட்டைக் குழந்தையர் பிறந்திருக்கின்றனர். இது குறித்து நடிகர் சிரஞ்சீவி தனது டுவிட்டர் பக்கத்தில், மிகுந்த மகிழ்ச்சியும் நன்றியுணர்வும் நிறைந்த இதயத்துடன், ராம் சரண் மற்றும் உபாசனா கொனிடெலா தம்பதி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றுள்ளதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஓர் ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும். குழந்தையர் இருவரும் ஆரோக்கியமாகவும், தாயாரும் நலமுடனும் உள்ளனர். இந்தச் சிறிய உயிர்களை நம் குடும்பத்தில் வரவேற்பது, பாட்டி-தாத்தாக்களாக எங்களுக்குத் தூய்மையான மகிழ்ச்சியும் தெய்வீக ஆசீர்வாதமுமாகும். அனைவரின் பிரார்த்தனைகள், அன்பு, ஆசீர்வாதங்கள் மற்றும் நல்ல வாழ்த்துகளுக்கு மனமார நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் எனப் பதிவிட்டிருக்கிறார்.