சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இந்த சீசனுக்கான மகரவிளக்கு பூஜை கடந்த மாதம் 31-ம் தேதி தொடங்கியது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்தபடி உள்ளனர். மண்டல பூஜை காலத்தை போன்றே, மகரவிளக்கு பூஜை காலத்திலும் தொடக்கத்தில் இருந்தே பக்தர்களின் வருகை மிகவும் அதிகமாக இருக்கிறது.

இந்த நிலையில் மகர விளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் சபரிமலையில் இன்று 14-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணங்கள், பந்தளம் அரண்மனையில் இருந்து நேற்று முன்தினம் புறப்பட்டது. திருவாபரண ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு ஆயரூர் புதியகாவு தேவி கோவிலில் தங்கியது. பின்னர் நேற்று காலை அங்கிருந்து புறப்பட்டது. திருவாபரணங்கள் அடங்கிய பெட்டியை அதற்காக விரதமிருந்த பக்தர்கள் தூக்கி சென்றனர். வழிநெடுகிலும் சாலையின் இருபுறங்களிலும் பக்தர்கள் திரண்டு நின்று திருவாபரணத்தை வரவேற்று வழிபட்டனர்.

அதை தொடர்ந்து திருவாபரண ஊர்வலம் தேதிலாகா வனத்துறை சத்திரத்தில் தங்கி பின்பு இன்று காலை அங்கிருந்து புறப்பட்டு மாலை 6 மணியளவில் திருவாபரணங்கள் வந்து சேர்ந்தது. மகரவிளக்கு பூஜை நடக்கும் இன்றைய தினம் வழக்கம்போல் அதிகாலை 3 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதன் பிறகு வழக்கமான பூஜைகள் நடத்தப்பட்டு மதியம் ஒரு மணிக்கு நடை சாத்தப்படுகிறது. பின்பு 2.45 மணிக்கு மீண்டும் கோவில் நடை திறக்கப்படும். அதன்பிறகு பிற்பகல் 3.08 மணிக்கு மகர சங்கிரம பூஜை தொடங்குகிறது. அதன் தொடர்ச்சியாக மாலை 6:30 மணியளவில் திருவாபரணங்கள் சன்னிதானத்தை வந்தடையும். அவை ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடத்தப்படும்.

அப்போது பொன்னம்பலமேட்டில் ஐயப்பன் மூன்று முறை ஜோதி வடிவில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். மகரஜோதி தரிசனம் செய்வதற்காக கடந்த சில நாட்களாகவே சபரிமலைக்கு வந்த பக்தர்கள் ஆங்காங்கே பல இடங்களில் குடில் அமைத்து தங்க தொடங்கி உள்ளனர். அது மட்டுமின்றி பம்பை மற்றும் சன்னிதானத்தை சுற்றியுள்ள பகுதிகள் உள்ளிட்ட பல இடங்களில் பக்தர்கள் டெண்ட் அமைத்து தங்கியுள்ளனர். இதனால் சன்னிதானம், பம்பை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது.